Posted by : ஆனந்த் சதாசிவம் Friday, August 30, 2013


எதற்குமே பக்கவிளைவு உண்டு. வாழ்க்கை வசதிகள் பெருகி, உடல் உழைப்புக் குறைந்ததன் விளைவாக, உடல் எடை அதிகரிப்பு, அதுதொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. சரி, உடல் எடையை எப்படிக் குறைப்பது? அதற்கு இதோ சில 'டிப்ஸ்'... 

* காலை உணவை கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது. மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். 

* குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை, நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது. 

* உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சோற்றைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேக வைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, சப்பாத்தி, தோசை வகைகள் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது. 

* முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* பழ வகைகளில், மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப்பழங்களைச் சாப்பிடலாம். 

* அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியை குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணையில் பொரிக்காமல் குழம்பு வைத்துச் சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். 

* குழந்தைகள் தினசரி ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். பெரியவர்கள் குறைந்தது அரை மணி நேரம் விறுவிறுப்பான நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும். 

* குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்றவற்றில் கூட்டாகப் பங்கேற்கலாம்.

* காலையில் எழுந்ததும் டீ, காபி அருந்துவதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள், பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரை அளவைக் குறைத்து அருந்தலாம். 

* கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால் அவற்றைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. பொதுவாக நாவை அடக்குவது என்பது கடினமான விஷயம். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் தேவையானவைதான். 

இவற்றை ஓரேயடியாகத் தவிர்த்தாலும் மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். எனவே, உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று அதிரடியாக உணவு முறையில் மாற்றத்தைச் செய்யாமல் படிப்படியாக அதில் ஈடுபடுங்கள். நல்ல பலனைப் பெறுங்கள்!

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்